1.0
தமிழ்மொழி வரலாறு
தமிழ்மொழி வரலாறு பல்வேறு
காலக்கட்டங்களில் மூன்று கோணங்களில் அணுகலாம். அவை தமிழ்மொழி அக
வரலாறு, தமிழ்மொழி அகப்புற வரலாறு மற்றும் தமிழ்மொழி புற வரலாறு.
i. அக வரலாறு
தமிழ்மொழியில் இடம்
பெற்றிருக்கும் உயிர் ஒலியன்கள் (Vowels), மெய் ஒலியன்கள் (Consonants), சார்பொலியன்கள், பெயர்ச்சொற்கள் (Nouns), அடிச்சொல் (Root Morpheme),மூவிடப் பெயர்கள் (Pronouns), எண்ணுப் பெயர்கள் (Numerals), வேற்றுமை (Case), வினைச்சொற்கள் (Verbs), இடைநிலைகள் (Suffixes), தொடரமைப்பு முறைகள் (Syntactic Structures) முதலியன
பழங்காலத்தில் எவ்வாறு இருந்தன ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எவ்வகை மாற்றங்களை அடைந்தன
என்று 21ஆம் நூற்றாண்டு வரை பரிசீலிப்பதைத்தமிழ்மொழி அக
வரலாறு என்று வரையறை செய்யலாம். இதுபோல் வரலாற்று நோக்கில் ஆராய்வதைத்தான் 'தமிழ்மொழியின் அகவரலாறு’ என்று வசதிக்காக
இப்பாடத்தில் வரையறை செய்யப்படுகிறது.
ii.
அகப்புற வரலாறு
ஒரு குறிப்பிட்ட
காலக் கட்டத்தில் தமிழ் ஒலியன், தமிழ் உருபன், தமிழ்த் தொடர் எங்ஙனம் இருந்தன
என்பதை அந்தந்தக் காலக் கட்டத்துத் தரவுகளின் அடிப்படையில் ஆராயலாம். தொல்காப்பியர் காலத் தமிழில் ஒலியன், உருபன், தொடர் அமைப்பு எவ்வாறிருந்தன என்பதைத் தொல்காப்பியத்தையே அடிப்படையாகக் கொண்டு ஆராயலாம். சங்க காலத் தமிழ்
எங்ஙனம் இருந்தது என்பதைச் சங்க இலக்கியங்களின் துணை கொண்டு ஆராயலாம். பல்லவர்
காலத் தமிழ் பற்றி அறிந்து கொள்ளப் பக்தி இலக்கியத்தை உதவியாகக்
கொள்ளலாம். சோழர் காலத் தமிழைப் பற்றி அறிய அவர்கள் வெளியிட்ட கல்வெட்டுகளைப்
பயன்படுத்தலாம். இப்படி ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமிழ்மொழி எவ்வாறு
இருந்தது என்று ஆராய்வதை அகப்புற வரலாறு எனலாம்.
iii. புற வரலாறு
வெவ்வேறு மொழி பேசுவோர் கலந்து பழகும்போது ஒரு மொழியில் உள்ள சொற்கள் மற்றொரு மொழியில் கலப்பது உண்டு. அவ்வாறு கடன் வாங்கப்பட்ட சொற்கள் இல்லாத மொழியே உலகில் இல்லை என்பார்கள். அவ்வகையில் தமிழில் வந்து
கலந்த பிற மொழிச் சொற்களின் கலப்புப் பற்றியும், ஒரு சொல்லுக்கு
உரிய பொருள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வருவது பற்றியும், கிளைமொழிகள்
பற்றியும் ஆய்வதைப் புற வரலாறு எனலாம்.
2.0 தமிழ்மொழியின் தொன்மை
தமிழ்மொழி திராவிட இனத்தின்
முதல் மொழி ஆகும். தமிழ்மொழி
மிக மிகத்தொன்மை வாய்ந்த மொழி. இத்தமிழ் மொழிக்குரிய எழுத்து வடிவங்கள் எந்தக்
காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இக்காலத்தில்தான்
தோன்றியது என்று திட்டவட்டமாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள்
உள்ளனர். தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு தமிழின் உண்மை வரலாற்றை
ஆய்வோம். தொன்மை காலத்தில் அதாவது பழங்காலத்தில், நாம்
இன்று கையாளும் தமிழ் எழுத்தல்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களில்
தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. அவைகள் தென்பிராமி
அல்லது தமிழ்ப் பிராமி,வட்டெழுத்துக்கள், கோலெழுதுக்கள்
மற்றும் மலையாண்மை என்பவைகளாம், இவற்றுள் தென்பிராமி அல்லது தமிழ்ப்
பிராமி எழுத்து முறைதான் மிக மிகத் தொன்மையானது. அசோகமன்னர் தன் கல்வெட்டுக்களில்
பயன்படுத்திய எழுத்து பாலி மற்றும் பிராமியே என்பது இங்கு குறிப்பிடத்தக்க
ஒன்றாகும். நமக்குக் கிடைத்துள்ள
இலக்கியங்களைக் கொண்டு நோக்கினால், சுமார் கி.மு.300க்கு முன்னரே நல்ல நாகரிகத்துடனும் சிறந்த பண்பாட்டுடனும், இலக்கிய வளத்துடன் விளங்கிய
மொழி தமிழ்மொழி என்பது புலனாகும். அம்மொழி தோன்றிய காலத்திலிருந்து இன்றளவும்
தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வரும் மொழி. அது தோன்றிய காலத்தில் தோன்றியதாகக்
கருதப்படும் சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகள் வழக்கில் இருந்து நீங்கின. இத்தகைய பழமை வாய்ந்த மொழியில்
பல்வேறு மொழிச்சொற்களும் இலக்கியங்களும் இணைந்திருப்பது காலத்தின் கட்டாயத் தேவை
என்பதை மட்டும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பதிவுக்கு நன்றி..
ReplyDeleteஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ லவவழல